வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் உண்மையில் எத்தனை தலைச்சொற்கள் உள்ளன என்பதில் தனக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக முகநூல் நட்பு வட்டத்தில் உள்ள ஒருவர் தனிப்பட்ட முறையில் உட்பெட்டியூடாகத் தெரிவித்திருந்தார்.
அவரது குழப்பத்திற்கான காரணம் தமிழ் விக்கிப்பீடியாவில் https://ta.wikipedia.org/s/18sq இணையமுகவரியில் காணப்படும் // அகங்காரம் முதல் வைராக்கியம் வரையான ஏறத்தாழ 1465 வட சொற்களுக்கான தூய தமிழ்ச் சொற்கள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.... // என்ற வசனத் தொடரின் மூலம் 1465 சொற்கள், அதே நேரம் விருபா தளத்தில் உள்ள // ...வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கத்தில் தலைச்சொற்களாக 1461 சொற்களும்... // பதிவின்படி 1461 சொற்களும், இதை மேலும் குழப்பமாக்கும் நிலையில் விருபா தளத்தில் http://www.viruba.com/Dictionaries/Vatasol_Tamil_Akaravarisaich_Surukkam.aspx முகவரியில் உள்ள பக்கத்தின் வலது பக்க அட்டவணையில் 82 வது பக்கத்தைப் பார்த்தால் 1464 சொற்களைப் பட்டியலிடப்பட்டுள்ளது, ஆக இதில் எந்த எண்ணிக்கை சரியானது என்பதே !
விருபா தளத்தில் 1461, 1464 என்ற இரண்டு எண்ணிக்கைகளைத் தந்துள்ளவன் என்ற வகையில் நான் இதற்குப் பதில் தரவேண்டியவனானேன்.
தமிழ் விக்கியில் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் மின்-அகராதி வடிவில் இல்லை. கட்டுரையைத் தொடங்கிய, தொகுத்த, புதுப்பித்த, மேம்படுத்திய தவிக்கியர்கள் குறித்த அகராதியில் எத்தனை சொற்கள் உள்ளன என்பதைப் பக்கம் பக்கமாக எண்ணியே அறிந்திருப்பார்கள் அல்லது அச்சில் வெளியான ஏதாவது ஒரு ஆய்வுக் கட்டுரையில் இருந்து குறித்த எண்ணிக்கையைப் பெற்றிருப்பார்கள். அங்கு எண்ணிம நிலையில் தலைச்சொற்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கான பொறிமுறை இல்லை.
விருபாவில், நாம் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் காணப்படும் ஒவ்வொரு சொற்களையும் எண்ணிமத் தரவுதள முறையில் பதிவு செய்துள்ளோம். அவ்வாறு பதிவு செய்யும் போது எவ்வாறு 1641, 1644 என்ற இரண்டு எண்ணிக்கைகள் கிடைக்கும் என்பதை அலசினோம்.
விடை கிடைத்தது.
உண்மையில் இவ்வாறான இரண்டு எண்ணிக்கைகள் வருவதற்கான அடிப்படைக் காரணம் 1938 இல் குறித்த அகராதியைத் தொகுத்த நீலாவதி அம்மையார் அவர்களின் வரிசைப்படுத்தல் முறையில் உள்ள சிறு வழு ஆகும்.
1. சிருட்டி
அக்குறித்த அகராதியின் 14வது பக்கத்தில் ( http://www.viruba.com/Dictionaries/SourceImage/STD_0014.jpg ) சிருட்டி என்ற சொல்லானது இரண்டு இடங்களில் தலைச்சொல்லாகக் காணப்படுகிறது. 14 பக்கத்தில் 4வது சொல்லாகவும், 18வது சொல்லாகவும் இரு தடவைகள் இடம்பெற்றுள்ளது.
2. தயை
அக்குறித்த அகராதியில் 15வது பக்கத்தில் ( http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=15 ) தயை என்ற சொல் 47வது சொல்லாகவும், 16வது பக்கத்தில் ( http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=16 ) 6வது சொல்லாகவும் இரு தடவைகள் தலைச்சொல்லாக இடம்பெற்றுள்ளது.
3. விகிதம்
அக்குறித்த அகராதியில் 23வது பக்கத்தில் ( http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=23 ) விகிதம் என்ற சொல் 68வது சொல்லாகவும், 24வது பக்கத்தில் ( http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=24 ) 52வது சொல்லாகவும் இரு தடவைகள் தலைச்சொல்லாக இடம்பெற்றுள்ளது.
எனவே விருபா தளத்தில் நாம் குறிப்பட்ட இரண்டு எண்ணிக்கையிலும் தவறு இல்லை.
1641 சொற்கள், 1644 தடவைகள் தலைச்சொற்களாக இடம் பெற்றுள்ளன என்பதே சரியானதாகும்.
விருபா தளத்தின் பின்னணியில் இயங்கும் தரவுதளத்தில் பின்வரும் படிமுறைகளினூடாக, எண்ணிம நிரலாக்க ஆணைகளைக்கொண்டு இதனைப் பெற்றுள்ளோம். ஒவ்வொரு பக்கமாக இருந்து எண்ணிக் கூட்டிக் காண்பது அல்ல. தரவுதளம் என்பதன் பலமே இதுதான்.
1. சொற்குவியல் தரவுதளத்தை அணுகுதல்
2. அகராதிகளைப் பட்டியலிடுதல்
3. வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் என்னும் அகராதியைத் தெரிவு செய்தல்
4. வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் தலைச்சொற்கள் பட்டியலிற்குச் செல்தல்
5. தலைச் சொற்களாக எத்தனை சொற்கள் உள்ளன என்பதைக் கணக்கிடுதல் >> 1464
6. ஒரு தடவைக்கு மேல் வரும் தலைச்சொற்கள் எத்தனை என்பதைக் கணக்கிடுதல் >> 3
7. 5 இல் கிடைத்த தொகையில் இருந்து 6 இல் கிடைத்த தொகையைக் கழித்தல் >> 1461
இப்படிமுறைகளினூடாகவே "நாம் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்" அகராதியில் 1461 தலைச்சொற்கள் உள்ளன என்பதைப் கண்டறிந்து பதிவு செய்துள்ளோம்.
விருபா தளத்தில் http://www.viruba.com/Dictionaries/Vatasol_Tamil_Akaravarisaich_Surukkam.aspx முகவரியில் உள்ள பக்கத்தின் வலது பக்க அட்டவணையின்,
பக்கம் 38 இல் 678வது சொல்லாக சிருட்டி என்ற சொல் காணப்படும் இடம் 14 : 04 : 01
பக்கம் 39 இல் 692வது சொல்லாக சிருட்டி என்ற சொல் காணப்படும் இடம் 14 : 18 : 01
பக்கம் 45 இல் 796வது சொல்லாக தயை என்ற சொல் காணப்படும் இடம் 15 : 47 : 01
பக்கம் 46 இல் 822வது சொல்லாக தயை என்ற சொல் காணப்படும் இடம் 16 : 06 : 01
பக்கம் 77 இல் 1380வது சொல்லாக விகிதம் என்ற சொல் காணப்படும் இடம் 23 : 68 : 01
பக்கம் 81 இல் 1444வது சொல்லாக விகிதம் என்ற சொல் காணப்படும் இடம் 24 : 52 : 01
மேலதிகமாக,
வடசொற்களுக்குத் தமிழ்ப் பொருள் கூறும் அகராதி. வடசொற் கலப்பின்றிப் பேச / எழுத / கற்பிக்க உதவிடும் நிலையில், தனித்தமிழ்ப் பேராசிரியர் மறைமலையடிகளின் மகளாரும், சென்னை நார்த்விக் மகளிர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவருமான, திருவாட்டி திருவரங்கம்பிள்ளை நீலாம்பிகையம்மையார் அவர்களால் இயற்றப்பட்ட வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் என்னும் அகராதியானது தலைச்சொற்களாக வடசொற்களையும், பொருள் விளக்கச் சொற்களாகத் தமிழ்ச் சொற்களையும் கொண்டிருக்கும் நிலையில் செய்யப்பட்டுள்ளது.
ஒரு சொல் வட சொல்லா ? இல்லை தம்ழச் சொல்லா ? என்பதில் பலருக்கும் மயக்கம் உள்ளது. அது இவ்வகராதியை உருவாக்கிய திருவாட்டி திருவரங்கம்பிள்ளை நீலாம்பிகையம்மையார் அவர்களுக்கும் இருந்துள்ளது. இதன் வெளிப்பாடே உச்சி, ஏனம், குணம், சமயம், நயம், பதி, பரம்பரை, பூசை ஆகிய 8 சொற்கள் தலைச்சொல், பொருள்விளக்கச் சொல் ஆகிய இரண்டு நிலைகளிலும் இடம் பெற்றுள்ளன.
இறுதியாக,
இவ்விடயத்தில் எனது விளக்கத்தினைக் கேட்ட நண்பருக்கு, வட சொல் அகரவரிசைச் சுருக்கம் என்னும் இச்சிறு அகராதியை, மின்-அகராதியாக மாற்றியதன் மகிழ்வை அந்த நண்பர் எனக்குத் தந்துள்ளார் என்பதை இத்தால் பதிவு செய்கிறேன். அந் நல்லாருக்கு என் நன்றிகள்.